Sunday, January 15, 2012

ஆதி சங்கரின் அறியுரைகள்

Adhi Sankarar-1தெய்வசிந்தனையில் மூழ்கு!

* உலக வாழ்க்கை பொய், செல்வமும் சுற்றமும் இளைமையும் நிலையானது அல்ல. இதை உணர்ந்து ஆன்மிக வாழ்க்கையில் இறங்குங்கள்.

* குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைவதுடன், மனதை அடக்குவதன் மூலமே இதயத்தில் இருக்கும் இறைவனைக் காணலாம்.

* மனம் அலையாதிருக்கவும், ஆன்மிக சிந்தனை நிலைத்து நிற்கவும், ஆசையை அடக்கவும் பிரார்த்தனையின் போது தியானம் செய்.

* உறவு, செல்வம், இளமை இவை அனைத்தையும் காலன் ஒரு கணத்தில் விழுங்கி விடுவதால் பொய்யானவற்றை துறந்து விடு. இறைவனை முழுமையாக நம்பி அவனது சிந்தனையில் மூழ்கிவிடு.

* ஒளியின்றி எந்தப் பொருளையும் பார்க்க முடியாது, அதேபோல் ஆன்மிகப்பயிற்சியின்றி, வேறு எந்த விதத்திலும் ஞானம் உதிக்காது.

* பொருளின் மீதுள்ள பேராசையை விடு. உழைப்பால் அடைந்ததைக் கொண்டு திருப்தியடை.

நாராயணனை வணங்குவோம்

''ஹரியை நான் துதிக்கிறேன். அவன் சர்வவியாபி. இந்த உலகம் தோன்றுவதற்கு காரணமான பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் வகையில் தான், சம்சார சக்கரம் அவனிடம் சுழல்கிறது. இந்த உலகம் அவனிடமிருந்தே தோன்றி உள்ளது. அது ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், இன்ப துன்பங்களின் மூலம் இயங்குவதும் அவனால்தான். அவன் ஆனந்தமே வடிவானவன். பூரணமாக இருப்பவன். எண்ணற்ற குணங்களை உடையவன். அவனையன்றி வேறு ஏதுமே இவ்வுலகில் இல்லை.

அவன் அனைவருக்குள்ளும் வசிக்கிறான். அவனது உடலே நமது உடல். எல்லாம் தெரிந்த அவனை எவராலும் அறிய முடியாது. அவனே உண்மைப்பொருள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வேள்வி என அவன் பலவிதமாக கூறப்படுகிறான்.

ஏக பரமாத்மாவாகிய அவன் விவரிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஐக்கியப்படுகிறான்.

சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.

விஷ்ணு பிரபுவே! என் கர்வத்தை அழித்துவிடு. என் மனத்தின் தீய போக்குகளை அடக்கு. விஷய இச்சைகளான கானல் நீரை நீக்கு. எவ்வுயிரின்பாலும் உள்ள உன் கருணையை என்னிடமும் காட்டு. இந்த சம்சார சாகரத்தினின்று என்னை விடுவித்துவிடு. பல அவதாரங்கள் எடுத்து உலகை நீ என்றும் காக்கிறாய். இவ்வுலக துன்பங்களைக்கண்டு அஞ்சி, இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்''.

உலகம் யாருக்கு கட்டுப்படும்?

குரு என்பவர் உண்மையை அறிந்தவர். தன்னை அண்டின சீடர்களின் நலனுக்காக இடைவிடாது பாடுபடுபவர். தூயோன் என்பவன் உள்ளமும் மனமும் தூய்மையாக இருக்கிறவன். பண்டிதன் என்பவன் விவேகி.
சம்சாரத்தில் சாரமாக இருப்பது எது? அடிக்கடி இதை நினைத்துக் கொண்டிருப்பதேயாகும். 'சம்சாரத்தில் ஏது சாரம்' என்று நினைத்துக் கொண்டே இருந்தால் பற்றைவிட்டுப் பிறப்பை அறுக்கலாம்.
சூரன் என்பவன் துன்மார்க்கத்தில் மனம் போகாமல் மனதை அடக்குகிறவன்; பெண்களின் பார்வைகளான பாணங்களால் அடிபடாதவன். சமர்த்தன் என்பவன் பெண்களின் நடையினால் வஞ்சிக்கப்படாதவன். குருடன் என்பவன் படித்திருந்தும் கெட்ட காரியம் செய்பவன். செவிடன் என்பவன் இதத்தை நல்லதை கேட்காதவன்.

இந்தப் பிரபஞ்சம் பிரியமாகப் பேசக் கற்றுக் கொண்டு தர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு மட்டுமே வசப்படும்.

லட்சுமி சுறுசுறுப்பான சித்தமுடையவனையும், நீதி தவறாத நடையுடை பாவனையுடையவனையுமே விரும்புவாள். முயற்சி செய்பவனுக்கே பயன் கிடைக்கும்.
இரவும் பகலும் சிந்திக்கத்தக்கது ஈஸ்வரனுடைய பாதார விந்தங்களே; மனிதரால் எப்போதும் ஸ்மரிக்கத் தக்கது ஹரிநாமமே! சம்சாரமல்ல. கண்ணிருந்தும் குருடர் நாஸ்திகரே.

எல்லா நல்ல குணங்களையும் அழிப்பது உலோபம் எனும் கருமித்தனமே. எந்தப் பொருள் நம் விருப்பத்தை நிறைவேற்றுகிறதோ அதுவே உயர்மதிப்புள்ள செல்வம்.

ஆண்டவனைப் பக்தியுடன் ஆராதிப்பவனுக்கே ஐஸ்வரியம் உண்டாகும். உடலெடுத்தவனுக்குப் பெரிய பாக்கியம் ஆரோக்கியம். செய்யக் கஷ்டமானது மனதை இடைவிடாது தடுத்துக் கட்டிப் போடுவதே.

தீமைக்கெல்லாம் காரணம் பணம்

* செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை.

* தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தே அச்சம் தோன்றும். எங்கும் இதே நிலைதான்.

* உன் மனைவி யார்? உன் மகன் யார்? இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார்? யாருடையவன் நீ? நீ எங்கிருந்து வந்தாய்? இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்.

* உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றையும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். பொய்யான இப்பொருள்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.

* உணர்ச்சிவெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்.

* ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள் கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம். மான்தோல் போர்த்துக் கொள்ளலாம். விஷய போகங்களை துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் போகிறது?

* நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ, யுத்தத்தின் பாலோ, சமாதானத்தின்பாலோ பற்று வைக்காதே. நீ விரைவில் பரம நிலை அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுடையவனாக இரு. உண்மையைப் பொய்யினின்று வேறுபடுத்தி அறி.

காசி விஸ்வநாதரை வழிபடுங்கள்

* 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.

* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.

* சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய முக்கண்கள். வேள்வியின் சொரூபம் அவன்.

* ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.

சம்பாதிக்கும் வரை தான் மதிப்பு


குருடன் எவ்வாறு பிரகாசிக்கும் சூரியனை காண இயலாதோ அது போல, ஞானம் இல்லாதவன் உயிர்களில் இறைவனைக் காண இயலாது.நம் உயிரைப் பறிக்கும் காலதேவன் நம்மை விடாது நெருங்குவது அறிந்தும், நாம் பயிலும் சாத்திர அறிவு நம்மை பாதுகாக்கும் என்றெண்ணி மதிமயக்கத்தில் இருக்காதீர்கள். உற்ற துணை கோவிந்த நாம சங்கீர்த்தனமே. அவனை போற்றி வழிபடுங்கள். யமனின் பாசக்கயிற்றில் இருந்து தப்பிக்க இதுவே வழி. சம்பாதிக்கும்வரை மட்டுமே சொந்தபந்தங்கள் நம் மீது அன்பு காட்டும். எனவே, சொந்தபந்தம் மற்றும் நட்புகளிடம் தாமரை இலை நீர்த்துளி போல பட்டும் படாமல் வாழ்வதே சிறந்தது. பாலபருவத்தில் விளையாட்டில் கருத்து செலுத்துகிறோம். இளைஞனாய் திரியும் காலத்தில் காதல் விளையாட்டில் மனம் அலைபாய்கிறது. கிழப்பருவத்தில் குடும்பக்கவலைகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. எவரும் மெய்ப்பொருளாகிய இறைவன் மீது நாட்டம் கொள்வதே இல்லை. இரவுக்குப் பின் பகலும், காலைக்குப் பின் மாலையும், வாட்டி எடுக்கும் குளிர்காலத்திற்குப்பின் வசந்த காலமும் மாறி மாறி வருகின்றது. காலம் மாறிமாறி வந்து லீலை புரிகின்றது. ஆயுள் தேய்ந்து கொண்டே போகின்றது. இப்படியிருந்தும் வீண்ஆசைகள் மட்டும் நம்மை விட்டு தேய மறுக்கிறது.

பொருள் பறந்து போய்விடும்

* ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.


* நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.


* பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை.


* மரணவேளை நெருங்கும் போது இலக்கண சூத்திரங்கள் நமக்கு கைகொடுக்காது. ஆகையால், கோவிந்தனைக் கூப்பிடு. கோவிந்தனைப் பாடி வழிபடு.


* பொருள் தேடும் வரை சுற்றத்தினர் நம்மை நேசிப்பர். நோயினால் உடல் தளர்ந்த பின் யாரும் நம்மை கண்டுகொள்ளமாட்டார்கள். எனவே, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆசையை விட்டு நல்ல எண்ணங்களை மனத்தில் சிந்தனை செய்வது நல்லது. நம்முடைய நிலைக்கேற்ப பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.


* பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக்கூடாது. காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும். அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையை செலுத்துங்கள்.


* எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.


* பகவத்கீதையை சிறிதாவது படிப்பவன், கங்கைநீரை துளியாவது பருகியவன், இறைநாமத்தை உள்ளன்போடு ஒருமுறையாவது சொல்பவன் ஆகியோருக்கு உறுதியாக எமபயம் இல்லை.

பயமில்லாதவர் யார்?

* தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அறியாமைத் தளையை நீக்கி விடுவிக்க அவரவரால் மட்டுமே முடியும்.

* சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.

* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.
* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.

* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.

* பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்தபோன பின் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஆசையினால் வரும் துன்பம்

* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.

* அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.

* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.

* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.

சுயநலம் உள்ளவரை கஷ்டமே

* பக்திவேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடையவேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான்.
* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை.

* குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம்.

* செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள்.

* குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்து விடுகிறார்கள்.
பொங்கலோ பொங்கல்!

* தை மாதம் முதல் சூரியன் வடதிசை பயணத்தை துவக்குகிறார். இதை பொங்கலாக கொண்டாடி மகிழ்கிறோம். வடமாநிலங்களில் இதையே மகரசங்கராந்தி என்பர்.
* ""ஒளியுடன் பிரகாசிப்பவனே! செம்பருத்தி நிறம் கொண்ட சூரியனே! இருளின் பகைவனே! பாவங்களைப் போக்குபவனே!'' என்று வியாசர் சூரியனைப் போற்றுகிறார்.
* வெற்றியைத் தருபவனே! வேதத்தின் உ<ட்பொருளே! மந்திரங்களால் போற்றப்படுபவனே! என்று யஜுர் வேதம் சூரியனை சிறப்பிக்கிறது.

* எங்களின் தீவினைகளைப் போக்கி காத்தருள வேண்டும் என்று சாமவேதம் சூரியனிடம் வேண்டுகிறது.

* சூரிய வழிபாட்டை தினமும் செய்தால் ஆத்மபலம், ஆயுள், ஆரோக்கியம், புகழ் கிடைக்கும்.

* சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுவோர் வாழ்வில் சகல சவுபாக்கியங்களையும் பெறுவர்.

* உழைப்பின் பெருமையை உணர்த்துவது பொங்கல். இந்நாளில், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளைத் தெய்வங்களாக எண்ணி நன்றி செலுத்த வேண்டும்.

No comments: