Saturday, March 22, 2014

போஜராஜன் சபையில்…



போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். கவிஞர்கள், தத்துவ மேதைகள் அவன் ஆட்சியில் பெரு மதிப்பு பெற்று சிறந்து விளங்கினர். காவியங்கள் இயற்றினர். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

சில சமயம் போஜன் கவிதையில் ஒரு அடி மட்டும் கொடுக்க மற்ற கவிஞர்கள் அதனை நிறைவு செய்ய முயற்சி செய்வர். இதற்கு ஸமஸ்யா பூர்த்தி என்று பெயர். பெரும்பாலும் காளிதாசனே ஸமஸ்யா பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்கினான்.  போஜன் காளிதாசனை தன் ஆருயிர் நண்பனாகவும் கொண்டிருந்தான். இவர்கள் குறித்து தமிழில் கூட சிவாஜி கணேசன் காளிதாசனாக நடித்து வெளிவந்த மகாகவி காளிதாஸ் (1966) திரைப் படம் பலருக்கு நினைவிருக்கும். இதில் போஜ ராஜனாக முத்துராமன் நடித்திருந்தார்.

போஜ மகாராஜன் அரசவையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.
***
ஒரு முறை போஜ ராஜனின் சபையில் திருடன் ஒருவனை பிடித்து வந்தார்கள். அவனை யாரென்று விசாரித்து, அவனது செய்கையின் பேரில் கடும் கோபம் கொண்ட போஜன், மரண தண்டனை விதித்தான். அப்போது அந்த திருடன், போஜனை நோக்கி  அழகிய சம்ஸ்க்ருத கவிதை ஒன்றை சொன்னான்:

ட்டிர்நஷ்டோ பாரவீயோ'பி நஷ்டோ பிக்ஷுர்நஷ்டோ பீமஸேநோ'பி நஷ்ட: |
புக்குண்டோ³ஹம் பூபதிஸ்த்வம் ஹி ராஜந்பாபங்க்தாவந்தக: ஸம்நிவிஷ்ட: ||

भट्टिर्नष्टो भारवीयोऽपि नष्टो भिक्षुर्नष्टो भीमसेनोऽपि नष्ट: |
भुक्कुण्डोऽहं भूपतिस्त्वं हि राजन्भापङ्क्तावन्तक: संनिविष्ट: ||

மரண தண்டனை பெற்ற திருடன் சொல்கிறான், ஹே ராஜன், பட்டி நஷ்ட: (பட்டி மரணமடைந்தார்), பாரவி நஷ்ட: பாரவியும் மரணமடைந்தார், பிக்ஷுவும் மரணமடைந்தார். பீமசேனனும் மரணமடைந்தார். புக்குண்டன் நான், பூபதி நீங்கள், ப..பாவரிசையில் யமன் நுழைந்திருக்கிறான்என்று சொன்னான். அவன் சொன்ன கவிதையில் இருந்த நகைச்சுவையை ரசித்து,  "தொலைந்து போ.." என்று போஜன் அவனை மன்னித்து அனுப்பினான்.
***
அக்காலத்தில் மன்னர்கள் நள்ளிரவில், மாறுவேடத்தில் தன் நகரை சுற்றி வந்து, நேரடியாக நகரின் நிலை பற்றி அறிந்து கொள்வர். திருடர் அபாயம் இல்லாது இருக்கிறதா, சாலை, தண்ணீர் கிணறு, தர்ம சத்திரம் போன்ற பொது வசதிகள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கிறதா, சந்தேகப் படும் படி ஒற்றர் நடமாட்டம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள இவ்வாறு ஊரைச் சுற்றி வருவதற்கு பெயர் நகர்வலம்.
போஜனும் ஒரு முறை நகர்வலம் வரும் போது ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். நள்ளிரவில் விளக்கெரிய காரணம் என்ன என்று அறிந்து கொள்ள, நெருங்கிச் சென்று சாளரம் (ஜன்னல்) வழியாகப் பார்த்தான். உள்ளே ஒரு அதிசயக் காட்சி. அந்த வீட்டில் மனைவி அமர்ந்திருக்க கணவன் அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். அவர்களது அருகில் தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து துளியை விட்டு இறங்கி விட்டது.
அருகில் இருந்த விளக்கைப் பார்த்து அதன் அருகில் செல்ல துவங்கியது. இதைக் கண்ட மனைவி பதறி, அக்னி தேவனைத் துதித்தாள். பதிவிரதையான அவள், கணவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவம் என்று அக்னி தேவனை நோக்கி தன் சிசுவை எரித்து விடாதே என்று வேண்டினாள். அந்த குழந்தை விளக்கின் நெருப்பைத் தீண்டியும் தீ சுடவில்லை. ஆச்சரியமான இந்த நிகழ்வைக் கண்டான் போஜன்.

மறுநாள் அவையில் இந்த நிகழ்வை மனதில் வைத்து புலவர்களைப் பார்த்து சொன்னான் "நேற்று இரவு ஒரு அதிசய நிகழ்ச்சியைப் பார்த்தேன்.  ஒரு வீட்டில் தீ சந்தனக் குழம்பானது" ("ஹுதாசனஸ் சந்தன பங்க சீதள:") என்று சொன்னான். அப்போது   சரஸ்வதியின் அவதாரம் என்று கருதப் பட்ட மகாகவி காளிதாசன் என்ன நடந்தது என்று தன் ஞானக் கண்ணால் அறிந்தான். அதை ஒரு கவிதையாகவும் சமைத்தான்:

ஸுதம்பதந்தம் ப்ரஸமீக்ஷ்ய பாவகே ந போ³யாமாஸ பதிம் பதிவ்ரதா |
³தா³வத் தத்பதி பக்திகௌ³ரவாத்³ தாஸநஸ்²சந்த³நபங்கஸீ²தல: ||

सुतंपतन्तं प्रसमीक्ष्य पावके बोधयामास पतिं पतिव्रता |
तदाभवत्तत्पति भक्तिगौरवा द्हुतासनश्चन्दनपङ्कशीतल:: ||

பதிவ்ரதா பதிவிரதை ஒருத்தி, பாவகே நெருப்பிலே, பதந்தம் சுதம் இறங்கி விட்ட மகனை, ப்ரஸமீக்ஷ்ய விலக்க, பதிம் கணவனை, ந போ³யாமாஸ உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை. அயர்ந்து உறங்கும் தன் கணவனை எழுப்ப அவள் விரும்பவில்லை.  ததா³ – அப்போது, தத்பதி பக்திகௌ³ரவாத் அவளுடைய பதி பக்திக்கு மரியாதை கொடுத்து, ஹுதாஸந தீ, சந்த³நபங்கஸீ²தல: சந்தனக் குழம்பாக (குழந்தையை சுடாமல்) ஆனது.

இவ்வாறு காளிதாசன் நடந்த சம்பவத்தை கவிதையாக சொன்னான். அரசனும் மகிழ்ந்து காளிதாசனுக்கு பரிசில் கொடுத்தான். தருமங்கள் செழித்து வளர்ந்த போஜன் அரசாட்சியில் பதிவிரதா தர்மமும் சிறந்து விளங்கியது.

***
ஒருமுறை போஜராஜன் காட்டுக்கு வேட்டைக்கு போனான். அப்போது வேட்டையாடிக் கொண்டே காட்டினுள் தனியாக வெகுதூரம் போய்விட்டான். பல காத தூரம் பயணத்தால் களைப்புற்று ஒரு நாவல் மரத்தடி நிழலில் அமர்ந்தான். அந்த மரத்தின் அருகிலேயே ஒரு குளமும் இருந்தது. அந்த மரத்தின் மீது பல குரங்குகள் இருந்தன. அவை ஒவ்வொரு நாவல் பழமாக பறித்து குளத்தில் போட 'குளுக்' 'குளுக்' என்று சத்தம் எழுந்தது. இதை ராஜன் பார்த்தான். பிறகு களைப்பு நீங்கி தான் வந்த குதிரையில் ஏறி அரண்மனைக்கு திரும்பினான். மறுநாள் அவையில் ஸமஸ்யா பூர்த்தி செய்யும் போட்டி ஒன்றை அறிவித்து "கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு" என்று ஒரு அடியைக் கொடுக்க, எல்லோரும் இதை வைத்து எப்படி கவிதை இயற்றுவது என்று விழித்தனர்.

வரம் பெற்ற கவியான காளிதாசன் அதனை நிறைவு செய்தான்.

ஜம்பூ³²லாநி பக்வாநி பதந்தி விமலே ஜலே |
கபிகம்பிதஸா²கா²ப்யோ கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு ||

जम्बूफलानि पक्वानि पतन्ति विमले जले |
कपिकम्पितशाखाभ्यो गुलुगुग्गुलुगुग्गुलु ||

கபிகம்பித  ஸா²கா²ப்யோ குரங்குகளால் அசைக்கப் பட்ட கிளைகளில் இருந்து, பக்வாநி ஜம்பூ³²லாநி பழுத்த நாவல் பழங்கள், விமலே ஜலே பதந்தி தெளிந்த நீரில் விழுந்தன, விளைவாக "கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு" என்ற சப்தம் எழுந்தது.
குரங்குகளால் உலுக்கப் பட்ட நாவல் மரக்கிளையிளிருந்து பழுத்த பழங்கள் தெளிந்த நீரில் விழும் சப்தமே அது என்று அற்புதமாக நேரில் பார்த்தது போல் சொல்லவும் மகாராஜன் ஆச்சரியப்பட்டு காளிதாசனைப் பலவாறு பாராட்டினான்.
***
ஒரு முறை  போஜ ராஜன் குளிப்பதற்காக, அரண்மனையில் இருந்த ஒரு சிறு குளத்திலிருந்து நீரெடுத்துக் கொண்டு அரச குடும்பத்து பெண் ஒருத்தி படி ஏறும் போது கைதவறி குடம் படிகளில் விழுந்து உருண்டது. இதைக் கண்ட அரசன் அந்த குடம் உருண்ட சத்தத்தை கவிதையில் பொருத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்து, அரச சபைக்கு வந்தவுடன் காளிதாசனைப் பார்த்து, "டடண்டடண்டண்டடடண்டடண்டம்" இதைப் பூர்த்தி செய் பார்ப்போம் என்றான், காளிதாசன் கவிதையாக்கினான்

ராஜாபிஷேகே மத³விஹ்வலாயா ஹஸ்தாச்ச்யுதோ ஹேமகடோ யுவத்யா: |
ஸோபாநமார்கே³ ப்ரகரோதி ஸ²ப்³³ம் டடண்டடண்டண்டடடண்டடண்டம் ||

[राजाभिषेके मदवीह्वलाया हस्ताच्च्युतो हेमघटो युवत्या:
सोपानमार्गे प्रकरोति शब्दं टटंटटंटंटटटंटटंटम् ]

ராஜாபிஷேகே அரசனுக்கு அபிஷேக காலத்திலே, மத³விஹ்வலாயா காமத்தால் பீடிக்கப் பட்ட, அழகிய கண்களை உடைய பெண், படிகளில் குடத்தை தவற விட்ட போது எழுந்தது சப்தம் "டடண்டடண்டண்டடடண்டடண்டம்".

***
இவ்வாறு அரசனுடன் நெருங்கிய நண்பனாகவும், தலைசிறந்த கவிஞனாகவும் காளிதாசன் இருப்பது பலருக்கும் பொறாமை ஏற்படுத்தியது. காளிதாசன் மீது காழ்ப்பு கொண்டனர். அரசனிடம் சென்று காளிதாசனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வெறுப்பு ஏற்படுத்தத் முயன்றனர். போஜன் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கோள் மூட்ட வந்தவர்களைப் பார்த்து நீங்கள் எல்லோருமாக சேர்ந்து காளிதாசனுடைய கவிதைக்கு ஈடாக ஒரே ஒரு கவிதை எழுதுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டான்.

பொறாமைக் காரர்கள் எல்லோரும் ஓருநாள் காலையில் ஒரு தர்ம சத்திரத்தில் உட்கார்ந்து கவிதை எழுத முயன்றனர். மாலைவரை முயன்றும் ஒரே ஒரு வரிதான் எழுத முடிந்தது.

போஜநம் தே³ஹி ராஜேந்த்³ர [भोजनम् देहि राजेन्द्र] ஹே ராஜா, சாப்பாடு கொடு

இவ்வாறு  ஆரம்பிக்கவே நாக்கு தள்ளிப் போய்விட்டது அவர்களுக்கு. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடுதான்.  அடுத்த வார்த்தை அவர்களில் ஒருவர் எடுத்துக் கொடுத்தார். எப்படிப் பட்ட சாப்பாடு வேண்டும் என்று எழுதுவோமே என்று,

க்ருதஸூபஸமந்விதம் [घृतसूपसमन्वितम्] நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)

இதற்கு மேல் என்ன முயன்றும் அவர்களுக்கு எழுத இயலவில்லை. வேறு வழியின்றி அந்த வழியாக வந்த காளிதாசனிடமே சரணடைந்தனர். இவர்களுக்காக மனம் இறங்கி சொன்னான்

மாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாதவலம் த³தி⁴ 
[माहिषम् शरच्चन्द्रचन्द्रिकाधवलम् दधि]

சரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன்
அதாவது சரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன், நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)

போஜநம் தே³ஹி ராஜேந்த்³ர க்ருதஸூபஸமந்விதம் |
மாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாதவலம் த³தி⁴  ||

भोजनम् देहि राजेन्द्र घृतसूपसमन्वितम् |
माहिषम् शरच्चन्द्रचन्द्रिकाधवलम् दधि ||

ஆவலுடன் இதைக் கொண்டுபோய் தாங்களே எழுதிய கவிதை என்று காண்பித்தார்கள். ஆனால் போஜன் இந்த கவிதை இவர்களால் கண்டிப்பாக எழுதஇருக்க முடியாது. இதில் காளிதாசனின் முத்திரை இருக்கிறது என்று உணர்ந்தான். அதனால் உண்மையில் யார் எழுதியது என்று அவர்களை மிரட்டிக் கேட்கவும், ஒப்புக் கொண்டனர். கோபம் கொண்ட ராஜனை காளிதாசன் சாந்தப் படுத்தி, பொறாமை கொண்டவர்களையும் மன்னித்து அவர்களுக்கும் பரிசில் பெற்றுத் தந்தான்.

***
ஒரு முறை போஜராஜனுக்கு விபரீத ஆசை ஒன்று ஏற்பட்டது.  அழகாக கவிதை எழுதுகிற காளிதாசன் வாயால் தனக்கு ஒரு இரங்கற்பா (சரம ஸ்லோகம்) பாடிக் கேட்க வேண்டும் என்பது தான். ஒருவர் இறந்தபின், அவரை நினைத்து இயற்றப் படுவதே இரங்கற்பா. இதை காளிதாசன் இயற்றி தான் உயிரோடு இருக்கும் போதே கேட்கவேண்டும் என்று ஆசைப் பட்டான் போஜன். அவனது பிடிவாத குணம் தெரிந்த காளிதாசன், சரஸ்வதி அனுக்கிரகம் பெற்ற தன் வாயால் ஒரு வார்த்தை சொன்னால் அது அப்படியே சத்தியமாக பலித்து விடும் என்று எண்ணி போஜன் அரண்மனையை விட்டே சென்று விட்டான்.
காளிதாசனைப் பிரிந்து போஜ மகாராஜன் மிகுந்த துயருக்கு ஆளானான். ஒரு காபாலிகன் வேடம் அணிந்து பல நாட்கள் காளிதாசனைத் தேடி அலைந்தான். இறுதியில் ராஜ்ஜியத்தின் எல்லையில் காளிதாசனைக் கண்டு பிடித்தான்.  சென்று அவனை வணங்கவும், காளிதாசன் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, தாரா நகரத்தில் இருந்து வருகிறேன் என்றான் காபாலிகன் வேடத்தில் இருந்த போஜன்.  "அப்படியா, அங்கே போஜராஜன் சௌக்கியமாக இருக்கிறாரா" என்று காலிதாசன் கேட்க, "எப்படிச் சொல்வது, போஜன் மரணம் அடைந்தார். " என்று போஜனே சொன்னான். சொல்ல ஒண்ணாத துயருடன் தரையில் விழுந்த காளிதாசன் வாயில் எழுந்தது சரம ஸ்லோகம்,

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா³ ஸரஸ்வதி |
 [अध्य धारा निराधारा निरालम्बा सरस्वति |]

பண்டி³தா: க²ண்டி³தா: ஸர்வே போஜராஜே தி³வம்  ³தே || 
[पण्डिता: खण्डिता: सर्वे भोजराजे दिवं  गते ||]

இன்று தாரா நகரம் நிராதரவானது. பண்டிதர்கள் சமூகம் சின்னாபின்னமானது. ஏனெனில் போஜராஜன் மரணம் அடைந்தான் (திவம் கதா).

காளிதாசன் வாக்கு சத்தியம். உடனே பலித்தது. அதுவரை பேசிக் கொண்டிருந்த காபாலிகன், பொத்தென்று தரையில் விழுந்தான். ஈனக் குரலில், "நானே போஜன்" என்று சொல்ல, காளிதாசன், "மகாராஜா இப்படி ஏமாற்றி விட்டீர்களே" என்று வருந்தி உடனே அந்த கணமே கவிதையை மாற்றி பாடினான்,

அத்ய தாரா ஸதா³ தாரா ஸதா³லம்பா³ ஸரஸ்வதி |
பண்டி³தா: மண்டி³தா: ஸர்வே போஜராஜே புவம்  ³தே ||

अध्य धारा सदा धारा सदालम्बा सरस्वति |
पण्डिता: मण्डिता: सर्वे भोजराजे भुवं  गते ||]

இன்று தாரா நகரம் ஆதரவு பெற்றது, சரஸ்வதி மகிழ்ந்தாள். பண்டிதர்கள் அலங்கரிக்கப் பட்டனர். ஏனெனில் போஜன் மண்ணுலகில் வந்து உதித்ததால். என்று மாற்றினான்.

போஜனும் பிழைத்தான். இவ்வாறு பலகாலம் காளிதாசனும் போஜனும் அறிவாற்றல் மிகுந்த இரு நண்பர்களாக, கவிஞனும் ரசிகனுமாக மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.

***
இது வரை விவரித்து வந்த சம்பவங்கள் யாவும் நடந்த வரலாறல்ல. காளிதாசன் காலத்துக்கும், போஜ ராஜன் காலத்துக்கும் சம்பந்தமே இல்லை. இருவரும் வரலாற்றில் வேறு வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள். இது வரை விவரித்த சம்பவங்கள் எல்லாம், பதினாறாம் நூற்றாண்டில் (1500-1600) வாழ்ந்த பல்லாளசேனர் என்கிற சம்ஸ்க்ருத கவிஞரின் கற்பனையே இவை. அவர் எழுதி வைத்த போஜ பிரபந்தம் என்கிற நூலில், இது போன்ற பல சம்பவங்களைக் கோர்த்து எழுதி இருக்கிறார்.

போஜனைப் போன்ற புலவர்களைப் போற்றும் ஒரு மகாராஜனும், வரலாற்றின் தலைசிறந்த கவிகளும் ஒரே காலத்தில், ஒரே நாட்டில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்கிற உயரிய கற்பனைதான் இந்த போஜ பிரபந்தம் என்கிற நூலின் அடிப்படை. சுவாரசியமான இந்த நூல் மிகவும் பிரபலம். இந்த நூலில் விவரித்துள்ள சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்திய தேசத்தின் அனைத்து மொழிகளிலும் நாடகங்கள், திரைப்படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.  சுவாரசியமான இந்த நூல் ஹிந்தி மொழி பெயர்ப்புடன் கீழ்கண்ட உரலில் கிடைக்கிறது.


No comments: