Thursday, January 23, 2014

மஹா பெரியவா வார்த்தைகள்




நாம் வெள்ளைக்காரர்கள் அல்ல. ஜனவரி முதல் நாள் எந்த விதத்திலும் நமது புத்தாண்டு அல்ல. ஆனால் பல நூறு ஆண்டுகள் வெள்ளையர் ஆண்ட நாடு இது. அவர்கள் அறிமுகப்படுத்திய பழக்க வழக்கங்கள் இன்றும் நம்மை விட்டு போகவில்லையே. ஆங்கிலத்தில் வீட்டிலேயே பேசும் தமிழ்க்குடும்பங்கள் அதை நாகரிகமாக கருதுகிறோமா? தாய்மொழி தள்ளி வைக்கப்படுவது ஏன்? அதன் சிறப்பு ஏன் புரியவில்லை? கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி ஏன் நகர்கிறோம்? நாம் என்ன காட்டு மிராண்டிகளா இன்னும்? எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில் நானும் கும்பலில் ஒருத்தன் தானே.

சரி, வழக்கம் போலவே ''ஹாப்பி நியூ இயர்'' சொல்கிறேன் அதோடு அங்கொரு கால் இங்கொரு காலாக ஒரு உருப்படியான விஷயமும் தருகிறேனே. நான் தரவில்லை இந்த விஷயம். மகா பெரியவா உங்களுக்கு தந்தது.

புது வருஷம் அன்றாவது/புது வருஷம் முதலாவது இதை கொஞ்சம் படித்து சாவதானமாக மனத்துக்குள்ளே உலவ விட்டால், தக்க வைத்தால், துக்குணியூண்டாவது பின்பற்றினால் --------- இது மகா பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும் புது வருஷ நமஸ்காரமாகட்டுமே.

மஹா பெரியவா சொன்னது நிறைய நிறைய சமுத்ரமாக இருக்கிறதே. அதை எல்லாம் எப்படி ஒரு மெயிலில் அனுப்ப முடியும்? தினமும் பத்து அல்லது பதினைந்தாக தரட்டுமா? இதோ ஆரம்பித்தாகி விட்டது.

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2.
இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3.
நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4.
நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5.
மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6.
வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7.
பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (''சிவ'' என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8.
வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் நம: சிவாயஎன்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் சிவஎன்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9.
அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் சிவஎன்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(
குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ''கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே'' - சம்பந்தர்.)

10.
பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

11.
பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தேஎன்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12.
சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் சப்தாதேவப்ரமிதஎன்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

13.
நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14.
விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

15.
ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்

No comments: