Friday, June 14, 2013

உபயோகித்த எண்ணெயா..? உஷார்!




பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

எப்படி உபயோகிக்க வேண்டும்?

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது. 

இராமன்.


No comments: