Thursday, January 23, 2014

தீராத கடனையும் தீர்க்கும் தோரண கணபதி!





சனாதன தர்மக்கடவுளான கணபதி, இடத்திற்கேற்ப அருள் வழங்குபவர். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். ஆலயங்களில் உள்ள கோஷ்ட விநாயகரை வணங்க, அனைத்து தெய்வங்களின் திருவருளும் கிடைக்கும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும். நடன கணபதி, கலைகளில் சிறந்து விளங்கச் செய்வார்.  

ஆற்றங்கரை விநாயகர், பாவங்களை எளிதாகக் கரைத்துவிடுவார். இடத்திற்கேற்றபடி அமர்ந்தருளும் ஆனைமுகனைப் பற்றி ‘ஆலயமும் கணபதி அம்சங்களும்’ என்ற விதிகளின்படி, சிவாலயங்களில் அம்மன்  சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி மூர்த்தங்கள், சக்தி வாய்ந்தவை. இந்த மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் தோரண கணபதி எனப்படுகிறார். தோரண கணபதியின் அருட்தன்மை சக்தி தேவி தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில் தோரண வாயில் என்ற அமைப்பு உள்ளது.

அதனுள் பிரவேசிக்கும்போது  பலிபீடத்திற்கு அருகில் வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீதோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அனைத்து வகையான கணபதி  மூர்த்தங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்தத் தோரண கணபதிக்கு இருக்கிறது. ஜடாமகுடமும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் வலக்கரத்தில்  அங்குசமும் இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் மோதகமும் வலக்கரத்தில் தந்தமும் வைத்துக்கொண்டு வலக்கையில் உள்ள  தந்தத்தைப் பயன்படுத்தி தன்னை வணங்குவோர் வாழ்வில் உள்ள கடன் என்கின்ற ருணத்தைத் தீர்த்து அருள் செய்கிறார் என்று சிவாகமத் துதிகள் சொல்கின்றன.

மூல ஆலயத்திலிருந்து நோக்கும்போது இவர் அமர்வது பிரம்ம ஸ்தானமாக அமைவதால் கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். எப்போதுமே வலம்புரி கணபதியாக இருப்பவர்; அதிக சாந்நித்தியம் உடையவர். பத்ம பீடம் என்கிற தாமரை பீடத்தில் அமர்ந்தவராய் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சத்தை அருளும் சக்தி கொண்டவர் இவர். கோஷ்டங்களை ஒட்டிய மேகலைப் பகுதியிலும் தோரண வாயிலுக்கு எதிராகவும் அமரும் கணபதிக்கு இந்த விசேட சக்தி உள்ளதால், அத் தலங்களுக்குச் சென்று வணங்கினால் பலனும் கிடைத்து விடுகிறது.

பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி ஆகிய இடங்களிலும், சிரு ங்கேரி சாரதா பீடத்துடன் கூடிய சாரதாம்பாள் சந்நதியிலும் தோரண கணேசர் அமர்ந்துள்ளார். கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். மானுட கடனைத் தீர்க்கக் கணபதி வழிபாடு உகந்தது. ருணம் என்ற கடனைத் தீர்க்காதுவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நலம் தரவல்லது இந்த கணபதி வழிபாடு.

தோரண கணபதி சந்நதிக்கு செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் ஒருநாள் என்று ஆறு வாரங்கள் சென்று கணபதியின் மேகலை முன்பாக மூன்று நெய்தீபங்கள் ஏற்றி முப்பழங்களாக மாதுளை, மா, கொய்யா இவற்றை (தோரண கணபதிக்கு பிடித்த பழங்கள்) வைத்து அறுகம்புல்லைச் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும்.

‘‘
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, ருணமோசன வ ல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா’’ என்றும், தமிழில் ஒரு விசேடப் பாடலான தோரண கணபதி துதியையும் கூறவேண்டும்:

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதயே! தோன்றிடுக என் கண்முன்னே!

வாங்கிய கடனை அடைக்க இயலாமல் அவஸ்தைபடுவோரும், கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாமல் அல்லல்படுவோரும் முதலுக்கு மோசம் இன்றி பணம் திரும்ப வந்தால் போதும் என்று நினைப்பவர்களும், இந்த விசேட கணபதிப் பெருமானை வழிபட்டுப் பலன் அடைய முடியும். நமது பூஜையால் மகிழ்ச்சி அடையும் தோரண வாயில் கணபதி தன்னுடைய எழுத்தாணிபோல் உள்ள தந்தத்தால் நம்மை நெருக்குகிற கடன் தீரும்படி தீர்ப்பு எழுதிவிடுவார் என்பது நம்பிக்கை.

சிறிதாகவோ, பெரிதா கடன் உள்ளவர்கள் சுக்கில சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று காலை, மாலை இருவேளைகளிலும் ருணவிமோசனம் தரும் தோரண கணபதி முன்பாக கூட்டாக யக்ஞம் செய்து வழிபடலாம். ரட்சைகள் செய்தும் கையில் கட்டிக் கொள்ளலாம்.

ருணவிமோசன அக்னி வழிபாடு முறையாக கல்ப விதியின்படி 32 வகையான யாகக் கூட்டுப் பொருட்களால் தோரண கணபதி முன் யக்ஞம் செய்தல் வேண்டும். இதை ஆறு  வாரங்களோ, ஆறு சதுர்த்தி திதியிலோ செய்யவேண்டும்.

ஒரு மனிதனுடைய ஜனன ஜாதகத்தில் ஆறாவது இடம்தான் கடன், நோய், எதிரி  மற்றும் வழக்குகளைப் பற்றிச் சொல்லும் பாவகமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் ஆறு வாரங்கள் அல்லது சதுர்த்தி திதிகளில் கடன் தீர்க்கும் கணபதிக்கு பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லக் காரணம் குறிப்பிட்ட 6ம் ஸ்தானம் பாவக்கிரஹங்களின் ஆதிக்கத்தில் இருப்பதுதான். ஆறுமுறை வழிபடுவதால் படிப்படியாகக் கடன்சுமை குறைந்து மகிழ்ச்சி அடையலாம்.
பண்டை நாட்களில் அரசர்கள், சத்ரு மற்றும் ருணரோக நிவாரண ரட்சைகளைக் கட்டிக்கொண்டு நலம் பெற்றார்கள்.

அதேபோல சாதாரண மனிதர்களும் எளிய முறையில் ருணரோக நிவாரண ரட்சைகளை செய்து கைகளில் அணிந்து கொள்ளலாம். ரட்சை என்றால் உயிரைக் காப்பது என்று பொருள். இது சாதாரண வண்ணக் கயிறு போன்று இன்று பல இடங்களில் முறையற்ற வகையில்  விற்கப்படுகிறது. 3x3 அளவுள்ள தாமிரத் தகட்டில், பலன் வேண்டி எந்தக் கடவுளை பூஜை செய்கிறோமோ, அந்தக் கடவுளின் பீஜாட்சரத்தை  எழுதி, அதில் 16 முடிச்சுகள், 7 முடிச்சுகள் இட்ட சிவப்பு அல்லது பஞ்சவர்ணக் கயிறை வைத்து பூஜை செய்து ஒரு வட்டமான டப்பாவில் வைத்து பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.

பிறகு, வெளியே செல்லும்போது கயிறைக் கையில் கட்டிக்கொண்டு செல்வது முறை.  இப்படியாக ரட்சையைச் செய்து அறுகம்புல், செவ்வரளி, வில்வம் மற்றும் முல்லை மலரால் அர்ச்சனை செய்து வந்தால் எப்படிப்பட்ட பெரும் கடனும் அடைந்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம். பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். 'நாள் செய்வதை நல்லோர் செய்யார்' என்பது பழமொழி. நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.

மைத்ர முகூர்த்தமும் கடன் தீர்தலும் ‘காலம் நமக்கு தோழன், காற்றும் மழையும் நண்பன்,’ என்று ஒரு புலவர் பாடினார். இதன்படி உரிய முகூர்த்த காலங்களைக் கணிதம் செய்து  பயன்படுத்தி வந்தால் எல்லா பேறுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கும், நிச்சயதார்த்தத்திற்கும் லக்கின நிர்ணய முகூர்த்தம்; குடமுழுக்கு மற்றும் பெருஞ்சாந்திகளுக்கு நேத்திர ஜீவனுடன் முகூர்த்தம்; குபேரன், லட்சுமி அருள்பெற வியாழன் அன்று (மாலை 5 - 8) குபேர முகூர்த்தம் என்று அந்தந்த வேளைகளை நாம் பயன்படுத்துகிறோம்.

அதுபோலவே, மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் கணிக்கப்பட்டுள்ளது. வாங்கிய  கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். தோரண கணபதியை வணங்கி விட்டு இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துங்கள். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும் மைத்ர வேளையை 6 மாதங்களுக்குக் கணித்தார்கள். வாஸ்து பூஜைக்கு ராகுகாலம், எமகண்டம் ஆகியவை விதி விலக்கு என்ப துபோல இதற்கும் விதிவிலக்கு உள்ளது.

மேஷம்:   வியாழன் காலை 9 - 10½ ;
ரிஷபம்:   வெள்ளி காலை 8 - 10½;
மிதுனம்:   புதன் காலை 7½  - 9;
கடகம்:    திங்கள் மாலை 4½  - 6;
சிம்மம்:    ஞாயிறு காலை 11 - 12½;
கன்னி:    வெள்ளி மாலை 5 - 6½;
துலாம்:    சனி காலை 10½  - 12½;
விருச்சிகம்: வியாழன் மாலை 3 - 5½;
தனுசு:     செவ்வாய் 10½  - 12½;
மகரம்:     சனி காலை 9 - 10½;
கும்பம்:    திங்கள் மாலை 3 - 5½;
மீனம்:     வியாழன் காலை 9 - 10½ வரை.

மைத்ர நேரம் என்பதற்கு நண்பன்போல கடன் அடைய உதவும் நல்ல நேரம் என்று பொருள். பயன்படுத்திப் பலன் பெறலாம். தோரண கணபதிக்கு சதுர்த்தி விழா காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையாகவும் தென்சென்னையின் வடக்குப் பாகமாகவும் விளங்கும் செல்வமணி குன்றத்தூர் எனப்படும் தென் குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழார் பெருமான் அவதரித்த இல்லத்திற்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்தி கோயிலில் தோரண வாயிலுக்கு எதிரில், ஸ்ரீதோரண கணபதி, தன்னை நாடி வருபவர்களுக்குக் கடன் தொல்லை தீர்ந்திட அருள்பாலிக்கிறார்.

கடன் தொல்லை தீரவேண்டும் என்று வேண்டுவதற்கும், கொடுத்த கடன் திரும்புவதற்கும், பிரதி செவ்வாய்க்கிழமை மற்றும் சதுர்த்தி நாளில் பக்தர்கள் வந்து நெய்தீபம், ஏற்றி விசேட பிரார்த்தனைகள் செய்கின்றனர். விநாயக சதுர்த்தி அன்று காலை 9 மணிமுதல் பகல் 1 மணிவரை சிறப்பு வழிபாடுகள்,  ஹோமங்களை பக்தகோடிகள் நடத்துகின்றனர். தோரண கணபதியை நாடுங்கள். தீரும் கடன் தொல்லை, பாருங்கள்.

Thursday, October 31, 2013

கந்த சஷ்டியின் தத்துவம்




(நாளை மறுநாள் கந்த சஷ்டி ஆரம்பம் 03-11-2013)

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழா கந்த சஷ்டிப் பெருவிழா. "சஷ்டி' என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும், பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்தி சூரபத்மன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியோரோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறை மீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது கந்த சஷ்டிப் பெருவிழா. இப்போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர்.

போருக்குப் பின்னர் முருகன், இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். அது ஏழாம் நாள் விழா.

ஆன்மாக்களுக்கு அல்லது மானிட உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம். அதை ஒட்டி ஆண்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் உண்டு. அவை மாயை, கன்மம். மாயையானது உலகப் பொருள்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டு பண்ணும். சூரபத்மனின் ஒரு தம்பியாக நின்ற தாருகனே மாயை மயமாக நின்று செயல்படுபவன்.

அடுத்த அழுக்கானது கன்மம். இதுவும் இரண்டு வகைப்படும். நல்வினை, தீவினை என சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன்.

மூன்றாவது மூல அழுக்கே ஆணவம். இதுவும் நான் என்றும், எனது என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாட்களில் அவற்றை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்த சஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்.

கந்தப் பெருமான் சூரபத்மனை வென்று அவனை தன் மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் மாற்றினான். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் 
அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான்.

கந்த சஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்தால் கந்தப் பெருமான் திருவடியடைந்து நிலைத்த இன்பம் பெறலாம்
 
 
 
 
 

Wednesday, October 16, 2013

தெரிந்து கொள்ளுங்கள் .....



01) சாப்பாட்டு பொட்டலம் கட்டப் போகிறீர்களா? சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டியபின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும். 

02)முருங் கைக் கீரை சுண்டல் செய்வதற்கு முதல் நாளே முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து வைக்கவேண்டாம், கீரையை ஒரு துணியில் சுற்றிவைத்தால் மறுநாள் இலைகள் தனியாக உதிர்ந்துவிடும். காம்புகளை மட்டும் எடுத்துவிட்டு சுண்டல் செய்து விடலாம். 

03.)வெங்காயத் தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்றுவிடும்.

04.) பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும்.

05) பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

06)சப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும்.

07)சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.

08)துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும். 

09)தோசைக் கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க தோசைக்கல் அல்லது வாணலி மிதமான சூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும். 

10)கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். 

11)சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும். 

12)உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டு விடும். எனவே, தவிடுக்கு பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு சிறு மணல், கல் துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும். 

13)போரிங் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும். 

14) 2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌ககூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள். 

15) மூ‌ன்று நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து அ‌ந்த எலு‌மி‌ச்ச‌ம் தோ‌ல் கு‌க்க‌ரி‌ல் அடி‌யி‌ல் ஊ‌றிய ‌பிறகு அதனை எடு‌த்து தே‌ய்‌த்தா‌ல்கு‌க்கரை‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்த கரை த‌னியாக வ‌ந்து ‌விடு‌ம்.

Tuesday, October 15, 2013

அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!!!

கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.

1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.

11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.

14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.

16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.

17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.

18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.

20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

21. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.