“யார் பெரியவர்? நானா நீயா?” என்ற வாக்கு வாதம் ஒருமுறை ஆக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்குமே வந்ததாக ஸ்ரீ அருணாச்சல புராணம் கூறுகிறது. ஆருத்ரா தரிசனம் மற்றும் மஹா சிவராத்திரி நாட்களுக்கு இடையே நடந்த அந்த வாதமே அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை உருவானதற்குக் காரணமாக அப்புராணம் கூறுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த அந்நிகழ்ச்சி, வேறு பல விஷயங்களையும் உணர்த்துவதாக நான் நினைக்கிறேன். அதை விளக்கும் ஒரு முயற்சியே இக்கட்டுரை. (ஸ்ரீமகாவிஷ்ணு முழுமுதல் பரம்பொருளின் வடிவமே என்பதில் நமக்கு எந்த பிணக்கும் இல்லை. இந்தப் புராணக் கதைக்காக, விஷ்ணு என்பது காக்கும் தொழில் கொண்ட கடவுளைக் குறிப்பதாக வைத்துக் கொள்வோம். புராணக் கதைகளின் மையமான நோக்கம் தத்துவங்களை விளக்குதல் தானே அன்றி, தெய்வ வடிவங்கள் பற்றிய பூசலை உண்டாக்குவதல்ல என்பதையும் மனதில் கொள்வோம்).
பலருக்கும் அந்நிகழ்ச்சி தெரிந்திருக்கலாம். எனினும் அதை இங்கே சுருக்கமாகக் காணலாம். தான் ஆக்குவதனாலேதான் காப்பதற்கு உயிர்கள் இருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று பிரம்மாவும், தான் காப்பதினால்தானே எவரும் உயிரோடிருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று விஷ்ணுவும் வாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவர்களின் தொழிலை நம்பி இருந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். வாதம் ஒரு முடிவுக்கும் வராது முற்றிக்கொண்டு இருந்ததால், முழு முதற் கடவுளாகிய பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை. உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.
சிறிது காலம் சென்ற பின் அடியைக் காண இயலாத விஷ்ணு சற்று சோர்வடைந்ததும், அசரீரியாக வந்திருப்பவர் பெரியவர் என்பதை உணர்ந்தார். மேலே பறந்து சென்ற பிரம்மாவோ, மேலேயிருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைப் பார்த்து, ‘அங்கிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு அவரிடம் சென்று அவ்வாறே கூறினார். உண்மை நிலையை உணர்ந்ததற்காக விஷ்ணுவை ‘எல்லா இடங்களிலும் விஷ்ணுவிற்குக் கோவில்கள் இருக்கும்’ என வந்தவர் வாழ்த்தினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.
ஆருத்ரா தரிசனத்தன்று அந்த நீள் நெடுஞ்சுடர் தோன்றியது என்றும், அதன் தாபம் தாங்காது விஷ்ணு முதற்கொண்டு அனைத்து தேவர்களும் வேண்டிக்கொண்டதால் அதுவே மலை உருவாகத் திருவண்ணாமலை ஆனது என்றும் புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி அன்று நள்ளிரவில் அபிஷேகம் நடக்கும்.
இவ்விரு கடவுளர்களும் தங்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்திருப்பார்கள் என்று நம்பக்கூடும். இதிலிருந்து நாமும் சில உண்மைகளை உணரக்கூடும். அதாவது, ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்பதை உணரவும், அதே போன்று மற்றவர் பொறுப்புகளை மதிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பொறுப்புக்கு நமக்கு எவ்வளவு சுதந்திரம் உளளதோ, அதே போன்று மற்றவர் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் நாம் சார்ந்திருக்கிறோம். இதனை உணர்ந்தால் எந்தச் சமூகம் தான் வளர்ந்து முன்னேற முடியாது? இந்நிகழ்ச்சியை அலசினால் இது தவிர மேலும் பல உண்மைகளையும் உணரலாம்.
பிரம்மன் முடியைப் பார்க்க மேலும், விஷ்ணு அடியைப் பார்க்க கீழும் சென்றதற்குப் பதிலாக, பிரம்மன் கீழும் விஷ்ணு மேலும் சென்றிருக்க முடியுமோ? அப்படி கேள்வி கேட்கலாம் என்றாலும், அது இயற்கையானதாக இருக்கமுடியாது. ஒன்றே பிரம்மம் என்ற நிலையை விட்டு பல கடவுளர்கள் என்னும்போது, மனிதர்களைப் போலவே கடவுளர்களுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு எனலாம். அதனாலாயே, விஷ்ணுவுக்குக் காக்கும் தன்மையும் பிரம்மனுக்கு ஆக்கும் தன்மையும் உள்ளது.
காப்பதற்கு செல்வமும் ஒரு துணை அல்லவா? அதனால்தானோ செல்வத்தின் திருவுருவாம் லக்ஷ்மி விஷ்ணுவின் துணைவியாக உள்ளார்? அதே போன்று, ஆக்குதல், எண்ணங்களை தோற்றுவித்தல், கலைகளை வளர்த்தல் போன்ற எல்லா ஆக்கச் சக்திகளுக்கும் கடவுளான பிரம்மனின் துணையாக சரஸ்வதி உள்ளார். இப்படி அவர்களின் துணைவிகளையும் சேர்த்து நாம் நடந்ததைப் பார்க்கும்போது மேலும் பல தத்துவங்கள் புனலாகின்றன.
காத்தல் என்றாலே ஏதோ ஒரு விதத்தில் செல்வமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. அந்தச் செல்வம் உலகு சம்பந்தப்பட்டதுதான். அது நிலம், மனை என்று தொடங்கி மற்ற வகையான செல்வங்களாகவும் தொடர்கிறது. அத்தகைய வசதிகள் சிறிதாவது இருந்தால்தான் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு, வடிவம் என்று கண்ணால் காணக்கூடியது போல் மற்ற புலன்களாலும் உணரக்கூடிய தன்மை உண்டு. அத்தகைய உலக சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி மற்றவர்களை விட தொழில் முனைவோருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதை அவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும்போது சமூகத்திற்கு நன்மையே செய்கின்றனர்; மனிதாபிமானமின்றி செயல் படுத்தும்போது தான் விளைவுகள் மோசமாகின்றன. செல்வம் தவிர உலகு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் காத்தல் அம்சத்தில் உள்ளதினாலோ என்னவோ, விஷ்ணுவிற்கு லக்ஷ்மி எனும் ஸ்ரீதேவியைத் தவிர பூதேவி எனும் துணைவியும் உண்டு. இப்படியாக பூமி, செல்வம் சம்பந்தம் விஷ்ணுவிற்கு இருக்கும் போது, அவர் பூமியைத் தவிர்த்து ஆகாயத்தில் பறந்து செல்வதையா எதிர்பார்க்கமுடியும்?
அதே போன்று ஆக்குதல் என்பது உலகு சம்பந்தப்பட்ட பிறப்பு, மற்றும் மனது சம்பந்தப்பட்ட எல்லாவிதமான எண்ணங்கள், திட்டங்கள் போன்ற புலன்களுக்குத் தெரியாத நுண்ணியமானவைகளையும் உற்பத்தி செய்யப்பட்டவைகள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவைகள் அனைத்துமே ஒருவர் தம் வாழ்க்கையில் கற்பதற்கு ஏதுவாக அமைந்து அவரை உயர்த்திச் செல்லும். அது தவிர அவைகள் அனைத்துமே உணர்வால் மட்டுமே அறிந்துகொள்ளப்படும் தன்மை வாய்ந்த நுண்ணிய திறன்கள் அல்லது பலன்கள் ஆனதால் உள்ளத்திலிருந்து அவைகள் வெளிப்படும்போதுதான் பேச்சாகவோ, செயலாகவோ மாறக கூடும். அப்படி வரும்வரை அதற்கு ஒரு வடிவமோ, அளவோ இன்றி புகை மூட்டம் அல்லது மேகக் கூட்டம் போல் தளர்ந்து படர்ந்து இருக்கும். அதனாலேயே ஒரு செயல்வீரனோடு ஒப்பிடும் போது வெறும் எண்ணங்கள் மட்டுமே கொண்டவனை ஒரு பனிப் படலத்திலோ மேகக் கூட்டத்திலோ மிதப்பாதகச் சொல்கிறோம். “எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?” என்பதும் இதை உணர்த்துகிறது. இப்படியாக அறிவு சார்ந்த, கற்றல் சம்பந்தப்பட்ட திறன்களுக்கு அதிபதியான சரஸ்வதியின் துணையான பிரம்மா புகை மண்டலம் அல்லது மேகக் கூட்டம் போல் மேலே போகாது கீழே போவார் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்? மேற்சொன்ன நிகழ்ச்சியில் அந்த இரு கடவுளர்களும் பின்னர் என்ன செய்தார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்றும், அதில் நமக்கு மேலும் என்ன படிப்பினைகள் இருக்கின்றன என்றும் இப்போது நாம் காணலாம்.
வராக வடிவில் கீழே சென்று கொண்டிருந்த விஷ்ணுவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. தன்னை விட ஒரு பெரிய சக்தி உள்ளது என்பதை அவர் உணர ஆரம்பித்தார். அதன் விளைவாக மேற்கொண்டு செல்லாமல் திரும்பிய அவர், தன்னை ஒரு சோதனைக்கு உள்ளாக்கிய அந்தச் சோதியினை உணர்ந்தார். ஒருவன் தனது வலிமையின் எல்லையை உணர்ந்ததும், அதற்கும் அப்பால் உள்ள சக்தியைத் தெரிந்து கொள்வது என்பது தானே முறையான வழி? ஒருவன் கை நிறைய சம்பாதித்து செல்வம் கொழித்து இருக்கையில், அவனுக்கு சொல்லொணாத் துயர் வந்தால் என்ன செய்வான்? “செல்வம் இல்லாதபோது, செல்வம் வேண்டினோம்; இதனால் பயனில்லை” என்று அனுபவப்பட்டு, அச்செல்வம் போனாலும் பரவாயில்லை என்று உணர்ந்து அதை இழக்கவும் தயாராக இருப்பான். அந்த நிலையில்தான் அவனுக்கு உலகின் நிலையாமை தெரிய வருகிறது. அவன் துறவுக்குத் தயார் ஆகிறான். இது போன்ற நிலையில்தான் விஷ்ணு இருந்தார்.
கிட்டத்தட்ட இதற்கு நேர் மாறான நிலையில் பிரம்மன் இருந்தார். கீழே விழுந்துகொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்த பிரம்மனுக்கோ அவரது புத்தி வேலை செய்ய ஆரம்பித்து, மேலிருந்து பூ வந்தால் அது மேலேயுள்ள முடியிலிருந்துதான் வருகிறது என்றும், அதனால் அப்பூவையே தான் முடியைப் பார்த்ததிற்கு சாட்சியாக வரச் சொல்லலாம் என்ற எண்ணமும் தோன்றி அப்படியே செய்கின்றார். இப்படிச் செய்தால் தான் வென்றுவிடுவோம் என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கலைகளுக்கும், ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதியின் பதிக்கு ஏன் இப்படித் தோன்றியது?.
அறிவு என்பது சரியான முறையில் சரியான மன நிலையில் வளரவில்லை என்றாலும், வெறும் உலக சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தாலும், அது இரு-முனைக் கத்தி போன்று ஒரு விரும்பத்தகாத ஆயுதமாக வளரக்கூடும். அப்போது புத்தியானது குறுக்குப் பாதையில் சென்று, அனைவருக்கும் உதவும் யுக்திகளுக்குப் பதிலாக தீய குயுக்திகளை வளர்க்கும். அது ஒருவனை தாழ் நிலைக்கும் கொண்டுசெல்லும். அதிலிருந்து மீள்வது மிகக் கடினமானதாகிவிடும். உலக வாழ்க்கையிலிருந்தே தன் செயல்கள் மூலம் ஒருவனுக்கு அறிவு வளர்ந்தாலும், அது படிப் படியாக அவனை நல் வழிப்படுத்தி இறுதியில் அறிவுக்கும் ஆதாரமான தன்னை உணரச் செய்வதாக அமைய வேண்டும். அப்படியாகவில்லை என்றால் அது பாழ் அறிவே. அது பொல்லா விளைவுகளையே கொடுக்கும். அதனால் ஒருவன் அனாவசியமாக வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டோ, அனர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டோ, தவறான வழிகளில் மற்றவர்களை நடத்திக்கொண்டோ வாழ்நாளை வீணாக்குவான். அதுதான் பிரம்மன் விஷயத்திலும் நடந்ததோ?
வாழ்வு நன்கு அமைய ஒருவன் செயல்களில் ஈடுபட வேண்டும். முதலில் அது அடிப்படை தேவைகளுக்கும், பின்பு சில கூடுதல் தேவைகளுக்குமாகத் தொடரும். ஆரம்பத்தில் இருந்த ஆசை பின்பு பேராசையாக மாறினாலும், ஒருவனுக்கு தலையில் இடி போன்று ஒரு துயர நிகழ்ச்சி நேரும்போது இவ்வுலகின் உண்மையை அவன் உணரக்கூடும். ஓடி ஓடித் தேடிய செல்வத்தின் இயலாமையை உணர்வான். ஆனால், அப்படி செயல்களில் ஈடுபடும்போதே அவன் அப்பொருட்களின் நிலையாத் தன்மையையும் உணர்ந்து, செயலை ஒரு கர்ம யோக வழிப்படி செய்து பலன்களில் நாட்டம் கொள்ளாது இருந்திருந்தால் மன முதுர்ச்சியை அடைந்திருப்பான். இவ்வழியில் பலன் கிடைக்க காலதாமதம் ஆகலாம் என்றாலும், பலருக்கும் இது தான் எளிதான, சிறந்த வழி. அவ்வழி செல்லும் போது செயலில் நேர்மை, திறமை கூடுவது அன்றி மனதளவிலும், முடியவில்லை என்னும்போது அதை ஒத்துக்கொள்ளவும், சரண் அடையும் மனப் பக்குவமும் வளரக்கூடும். விஷ்ணு அதைத்தான் செய்தார்.
அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத,
பக்குவம் அடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும். இதனையே “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு” என்பார் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி. பக்குவத்துடன் அறிவு வளரவில்லை என்றால் அந்த அறிவு, தன்னைத் தோண்டி ஞானம் பெற வழி வகுக்காது. பிரம்மனுக்கு நடந்தது போல் குறுக்கு வழியில் செலுத்தி மேலும் பல துன்பங்களைத்தான் கொடுக்கும். அறிவு சார்ந்த ஞான மார்க்கம் நேரான மார்க்கமாக இருந்தாலும், அது சரியான விளைவுகளைக் கொடுப்பதற்கு ஒருவன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வழியில் தான் யார் என்ற அறிவு சார்ந்த கேள்விதான் கேட்கமுடியும். அதற்குண்டான பதில் இயல்பாக உணர்வில் உதிக்கும் வரை பொறுமையும் முயற்சியும் வேண்டும். அப்போது ஞானிகள் கூற்றுப்படி பிரம்மன், விஷ்ணு என்ற இரு கடவுளரின் உண்மைத் தன்மையும் தெரிய வரும்.
“திருவண்ணாமலையே எல்லாம்” என்று அதனை அடைந்து, இக வாழ்வின் இறுதி வரை அங்கிருந்து எங்குமே செல்லாத பகவான் ரமணர், மற்றும் பல ஞானிகளின் கூற்றுப்படி ஞான மார்க்கமே கர்ம மார்கத்தை விட உன்னதமாகும். மற்ற யோக வழிகள் எல்லாவற்றையும் இவை இரண்டுக்கும் இடையே வரிசைப்படுத்தி விட்டு, அவை எல்லாமே கர்ம மார்கத்தின் வெவ்வேறு முறைகள்தான் என்றும் ரமணர் “உபதேச உந்தியார்” நூலில் குறிப்பாகச் சொல்வார். அதனை இப்படியும் புரிந்து கொள்ளலாமோ? முதலில் நமக்கு உகந்த வழியை எடுத்துக் கொள்வது, அதிலே பழகப் பழக அதுவே நம்மை நுணுக்க முறைகளுக்குக் கொண்டு சென்று அதி உன்னத நிலையான “தன்னை”யும் உணர வைக்கும்.
அப்படியென்றால், பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும் இருக்கிறதோ? ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர். விஷ்ணுவோ பாதியிலேயே தன் தவற்றை உணர்ந்து சரணடைகிறார். அதாவது, எப்படிப் பட்ட கரடு முரடான பாதையாக கர்மா வழி தோன்றினாலும், அது ஒருவன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலும் அவன் உள்ளத்தைப் பண்படுத்தி உயர் நிலைக்குச் செல்லவைக்கும் ஆற்றல் உடையது என்பதை உணர வைக்கிறதோ? மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் - மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே “தான் யார்” என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் - பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?
இப்படியாக, நமது புராண, இதிகாச நிகழ்ச்சிகளும் நமக்கு வழி வழியாக வந்திருக்கும் வேத-உபநிஷத உண்மைகளையும், முறைகளையும் தான் உருவகங்களாக உபதேசிக்கின்றன. அவைகள் அனைத்திலும் உள்ளதை உள்ளவையாக உண்மை உணர்வுடன் தேடினால், நமக்குக் கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம்